புத்தக மதிப்பு என்றால் என்ன? என்று பார்ப்போம். ஒரு பங்கின் புத்தக மதிப்பு (Book Value) எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக புத்தக மதிப்பு (Book Value) என்பது சந்தை விலையை நிர்ணயிப்பது இல்லை என்றாலும், ஒரு பங்கின் Book Value நல்ல நிலையில் இருந்தால் தான், அந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல முறையில் நடத்தப்பட்டு அதனால் லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம். புத்தக மதிப்பு(Book Value) என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருப்பதால் அடைந்திருக்கும் மதிப்பு. ஆனால் சந்தை விலை என்பது, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எப்படி வளரும் என்னும் கணிப்பை வைத்து நிர்ணயிக்க படுகிறது. அதனால் அனேகமாக எல்லா பங்குகளின் சந்தை விலையும், Book Value-வை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக, சில பங்குகளின் Book Value சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். ஏன் இப்படி? சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். நல்ல நிலையில் நிறுவனம் நடந்துகொண்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வரை அந்த நிறுவன பங்கின் சந்தை விலை கூடுவது என்பது கஷ்டமான காரியம். இன்று மிக பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்கள் ஒரு காலத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தவைதான். அதனால் அப்படி பட்ட நிறுவனத்தின் பங்குகளை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி சந்தை விலையை விட Book Value அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை Value Buy என்று சொல்கிறார்கள்.
புத்தக மதிப்பை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவனம் இன்று அதனை மூடும் நிலைக்கு வரும் ஆனால், ஒவ்வொரு பங்குக்கும் அந்த நிறுவனம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இந்த புத்தக மதிப்பு. புத்தக மதிப்பு(Book Value) அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கி விடக்கூடாது. அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது, அந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு, Promotors என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் மற்றும் Promotors நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் அலசி பார்த்து வாங்கவேண்டும்
--------------------------
அன்புடன்
கி சுரேஷ்குமார்